கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு


கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
x

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை

சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடி செலவில் உலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.6.2023 அன்று திறந்து வைத்தார்.1,000 படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சைத் துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை. சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.

திடீர் ஆய்வு

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு, அந்த நோயாளிகளின் உறவினர்களுடன் முதல்-அமைச்சர் உரையாடினார்.

மேலும், நரம்பியல் சிகிச்சை பிரிவிற்கும் சென்று அங்கு உள்ள நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து, இங்கு செயல்பட்டு வரும் இதய கேத்லாப் ஆய்வகத்திற்கு சென்று ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

அதனைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுக் கூடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனைக்கு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சை பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் ஆணையிட்டார்.

மேலும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

1 More update

Next Story