முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்..!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்..!
x

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்.

சென்னை,

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மறுதினம், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர் பெங்களூரில் தங்கி இருந்து நாளை மறுநாள் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த போது பெரிய அளவில் விவாதங்கள் நடக்கவில்லை. ஒருமித்த கருத்துடன் பிரதமர் வேட்பாளரும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் இப்போது நடைபெற உள்ள 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமை, பிரசார உத்திகள் பிரதமர் வேட்பாளர் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story