ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்
‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
சிலம்புச் செல்வர்
'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் பொன்னுசாமி கிராமணியார் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 1906-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி மகனாகப் பிறந்தார். ம.பொ.சி. சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். தான் பெற்ற அனுபவத்தாலும் சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும் சிறந்த தலைவராகவும் தமிழறிஞராகவும் விளங்கினார்.
கிராமணி குலம் தமிழ் முரசு தமிழன் குரல் செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார்.
தலைநகரை காப்போம்
அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து தனி ஆந்திர மாநிலம் அமைத்திடும் மத்திய அரசு முடிவுக்கு 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு ம.பொ.சி. கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று வீரமுழக்கமிட்டார். ம.பொ.சி.யின் தீவிர எல்லைப் போராட்டத்தின் காரணமாக திருத்தணி ஆந்திராவுக்கு சென்று விடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
ம.பொ.சி சட்டமன்ற மேலவைத் தலைவராக திறம்பட பணியாற்றியதோடு தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றினார். 1966-ம் ஆண்டு அவர் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" என்ற நூலுக்கு 'சாகித்ய அகாடமி விருது' வழங்கப்பட்டது. அவரின் பொதுத்தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
குரல் எழுப்பினார்
'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் ம.பொ.சி. ஆவார். அதனைத் தொடர்ந்து அன்றைய முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா 1968-ம் ஆண்டு இதற்கான தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என்று அனைவராலும் அழைக்கப்பட்டது.
ம.பொ.சி. 1946-ம் ஆண்டு தமிழரசு கழகத்தை தொடங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ம.பொ.சி. பிறந்த நாள் விழா ஜூன் 26-ந்தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 117-வது பிறந்த நாளையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.