மதுரை சித்திரை திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ந் தேதி நடக்கிறது. 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ந் தேதி நடக்கிறது. 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் பிரமோற்சவ விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்கப்பெறுவதாகும். அதன்படி சித்திரை தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கும்.
12 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழா ஏப்ரல் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் ஏப்ரல் 30-ந் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 1-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாண விழாவில் அன்று இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
திருக்கல்யாணத்திற்கு மறுநாள் மே 3-ந் தேதி மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதை தொடர்ந்து 4-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா
இதற்கிடையே கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் தொடங்கிவிடும்.
அதில் முக்கிய நிகழ்வாக மே 4-ந் தேதி மதுரை வரும் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி புதூர் மூன்றுமாவடி பகுதியில் நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5-ந் தேதி நடைபெறுகிறது.