வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை


வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
x

கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக செல்ல தொடங்கி உள்ளனர்.

கடலூர்

புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உலகம் முழுவதில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். சிலர் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் பங்கேற்பார்கள். இதன்படி இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாத யாத்திரை தொடங்கினர்

இந்த விழாவில் பங்கேற்பதற்காக கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரியை சேர்ந்த கிறிஸ்தவர்களும் பாத யாத்திரையாக கடலூர் வழியாக செல்ல தொடங்கி உள்ளனர்.

சிலர் சிறிய அளவிலான மாதா தேரை இழுத்தபடி செல்கின்றனர். சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது. பாத யாத்திரையாக செல்லும் அவர்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் தங்கியும் செல்கிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு, தண்ணீர் வழங்கி வருகின்றனர்.


Next Story