பொதுசிவில் சட்டம்: ரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை - பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன்


பொதுசிவில் சட்டம்: ரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை - பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன்
x
தினத்தந்தி 29 Jun 2023 6:49 AM GMT (Updated: 29 Jun 2023 8:33 AM GMT)

பொதுசிவில் சட்டம் குறித்து முதல்-அமைச்சர் அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். இதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுகின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதல்-அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் பதில் அளித்து கூறியதாவது:-


"பொது சிவில் சட்டத்தால் குறிப்பிட்ட மதமோ, இனமோ பாதிப்படைய போவதில்லை. நீதிமன்றம், சட்டம் வழக்கு போன்றவற்றிற்கு பொதுவான ஒரு அமைப்பு வேண்டும் என்பதாலேயே பிரதமர் நரேந்திரமோடி இதனை கூறியுள்ளார். முதல்-அமைச்சர் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து.

பீகாரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்; முதல்-அமைச்சர் அதனை பார்க்க தவறிவிட்டார் என நினைக்கிறேன்.

ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறோம் என்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சட்டம் இருக்க முடியுமா? இந்தியா என்ற குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்களுக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்பது நியாயம் தானே என பிரதமர் மோடி தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார்" என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார்.


Next Story