தாம்பரம் கன்னடப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - 22 பேர் கைதாகி விடுதலை


தாம்பரம் கன்னடப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - 22 பேர் கைதாகி விடுதலை
x

தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 22 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையம் சர்வீஸ் சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இந்த சர்வீஸ் சாலை வழியாக காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பகுதியில் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியதுடன், அதிகளவில் விபத்துகள் நடந்து, உயிர் பலி ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பொக்லைன் எந்திரத்தில் சிக்கி பலியானார்.

எனவே கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரி நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கன்னடபாளையம் தர்காஸ் சாலை சந்திப்பில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பகுதியில் கனரக வாகனங்கள் அனுமதித்த நேரத்தில் மட்டுமே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என உறுதி அளித்தார். இதனால் சுமார் ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் போலீசார் உறுதி அளித்தும் மீண்டும் அந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்று வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 22 பேரை கைது செய்தனர். அனைவரையும் தாம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.


Next Story