இன்று முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்


இன்று முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
x
தினத்தந்தி 31 Dec 2023 1:26 AM GMT (Updated: 31 Dec 2023 1:33 AM GMT)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்த பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இனி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். மேலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் 300 அரசு விரைவு பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 360 அரசு விரைவு பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும்.

கும்பகோணம், சேலம், கோவை, விழுப்புரம் கோட்டம் பேருந்துகள் மற்றும் பெங்களூரு, ஈசிஆர் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story