ஓட்டலை அதிரடியாக மூடி'சீல்' வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
தூத்துக்குடியில் ரோட்டை அனுமதியின்றி சேதப்படுத்தியதுடன், கழிவுநீரை மழைநீர்கால்வாயுடன் இணைத்த விவகாரத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓட்டல் மீது புகார்
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் சமீபத்தில் புதிதாக ஒரு தனியார் ஓட்டல் திறக்கப்பட்டது. இந்த ஓட்டலில் இருந்து சுகாதாரமற்ற முறையில் கழிவுநீரை கால்வாயில் விடுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
ரோடு சேதம்
அப்போது, அனுமதியின்றி ரோட்டை உடைத்து கழிவுநீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் இணைத்து வெளியேற்றியது, ரோட்டை சேதப்படுத்தியதற்காக ஓட்டல் உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
ஓட்டலுக்கு சீல் வைப்பு
தொடர்ந்து அந்த ஓட்டலை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.