கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடிக்கல் நாட்டினார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.90.59 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

ஜகன்நாதன் தெருவில் ரூ.49.62 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மின் கோட்ட உதவி பொறியாளர் அலுவலக கட்டிடத்தையும், ஜவகர் நகரில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

ஜகன்நாதன் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நல உதவிகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும், பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள், 4 சக்கர தள்ளுவண்டிகள், மீன்பாடி வண்டிகள், திருமண நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

முன்னதாக, எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களையும், அனிதா அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 349 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 'நீட்' என்ற தேர்வு எழுதினால்தான் மருத்துவ படிப்பை தொடமுடியும் என்ற ஆபத்தான ஒரு நிலை. ஆகவே இந்த 'நீட்' உடனே அகற்றப்பட வேண்டும், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் அதற்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்,

தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் மக்களுக்காக, ஏழை-எளியவர்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு இயக்கம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய குடியிருப்புகள்

சென்னை கொளத்தூர் ஜமாலியா லேன் பகுதியில் 1976-ம் ஆண்டு தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 128 குடியிருப்புகள் சிதிலமடைந்து தகுதியற்ற நிலையில் இருந்தது.

இந்த குடியிருப்புகளை அகற்றி விட்டு அங்கு ரூ.17.63 கோடி மதிப்பில் தரை மற்றும் 5 தளங்களுடன் கூடிய 130 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட உள்ள இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


Next Story