கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் - தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்று தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி பேசினார்
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
அதில் தமிழக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த அவர், 'சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க காவல் துறை இருக்கிறது. அவர்கள் அதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் 'இன்றைக்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிமாநில தொழிலாளர்கள் தேவை இருக்கிறது. அவர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மொத்தமாக குறை சொல்வது தவறு. இதில் காவல்துறையும், அரசும் தக்க நடவடிக்கை எடுக்கும்' என்றும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தேர்தல் நிறுத்திவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 'இதுவரை தி.மு.க. ஆட்சி காலத்தில் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டதாக தெரியவில்லை. தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுவிட்டதாக பட்டியலிட்ட அவர், ஒரு சில வாக்குறுதிகள் தமிழக நிதி நிலைமையை பொறுத்து வரும் காலங்களில் அவைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பி.பி.சி. ஆவணப்பட சர்ச்சையில் தி.மு.க.வின் நிலைப்பாடு?, மு.க.ஸ்டாலினை விட உதயநிதியை அதிகம் புகழ்வது ஏன்? விஞ்ஞான ரீதியாக பால் விலையை உயர்த்துகிறதா தி.மு.க. அரசு? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தான கேள்விகளுக்கும் கலாநிதி வீராசாமி எம்.பி. பதில் அளித்துள்ளார்.