வணிகர்களுக்கு புதிய சமாதான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


வணிகர்களுக்கு புதிய சமாதான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2023 3:39 AM IST (Updated: 11 Oct 2023 4:13 AM IST)
t-max-icont-min-icon

வணிகர்களுக்கு புதிய சமாதானத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான வணிக வரி, வட்டி, நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பணிச்சுமை அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர்பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 கேட்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 569.

இவற்றில் நிலுவையாக உள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மிக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, நமது வணிகர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான வழக்குகள் தமிழ்நாடு வணிக வரிச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள். மேற்கூறிய இரு முக்கிய சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 1-7-2017 முதல் நாடு முழுமைக்கும் ஜி.எஸ்.டி. சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இருந்தாலும், ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மேற்கூறிய வரிச்சட்டங்களின் கீழ் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியன இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன.

சமாதானத்திட்டம்

இந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு சமாதானத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும் கூடுதல் சலுகைகளோடும் இந்தத் திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலுவை தொகை

இந்த திட்டத்தின் கீழ், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அரசின் இந்த முடிவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 சிறு வணிகர்கள் தமது நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பலனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிலுவையில் உள்ளவர்கள், ரூ.10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளவர்கள் என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர்.

தள்ளுபடி

மேற்கூறிய 4 வரம்புகளில் முதல் வரம்பில் உள்ளவர்கள் மொத்த நிலுவைத் தொகையில் 20 சதவீதத்தை கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம். அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளி வரலாம்.

இதர 3 வரம்புகளில் உள்ள வணிகப் பெருமக்களும், நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களுள், வரி விதிப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும், வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் மேல் முறையீடு செய்து இருப்பவர்களுக்கும் எனத் தனித்தனியாக நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மேலும் ஒரு முக்கியச் சலுகையாக, நிலுவைத் தொகையினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டி தொகையும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

நடைமுறை காலம்

தமிழ்நாட்டின் வணிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டம் வரும் 16.10.2023 முதல் நடைமுறைக்கு வரும். 4 மாத காலம் நடைமுறையில் இருக்கும். அதாவது 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி வரை இந்த சமாதானத் திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இத்தகைய முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story