கருகும் தென்னை மரங்கள்


கருகும் தென்னை மரங்கள்
x

காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.

தென்னை மரங்கள்

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களும் வறட்சியான மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே அந்த ஆண்டு குடிதண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். மேலும் அவ்வப்போது பெய்ய வேண்டிய பருவமழை நன்றாக பெய்து இங்குள்ள கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை இருந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகள் வைகை ஆற்று பாசனத்தை நம்பி உள்ளது. இதுதவிர மற்ற இடங்கள் மணிமுத்தாறு, விழிச்சுழியாறு, தேனாறு, பாலாறு ஆகிய பகுதியில் அந்த ஆண்டு நன்றாக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ஆறுகளில் தண்ணீர் நிரம்பி இங்குள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரம்பும் நிலை உள்ளது.

இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளுக்குபின் இந்த ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த தண்ணீரை வைத்து கடந்த ஆண்டு விவசாயத்தை இந்த பகுதி மக்கள் செய்து முடித்தனர்.

பயிர்சாகுபடி

அதன் பின்னர் கோடைகாலம் தொடங்கியதால் கிணற்று பாசனத்தை நம்பிஇருந்த விவசாயிகள் மட்டும் தங்களது விவசாய நிலங்களில் 2-ம் போக நெல் பயிர் சாகுபடி செய்து அவற்றை பராமரித்து வருகின்றனர்.

வேதனையில் விவசாயிகள்

இந்தநிலையில் கல்லல் அருகே உள்ள பகுதியில் இவ்வாறு கிணற்று பாசனத்தை நம்பி சில விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விவசாயமும், சில விவசாயிகள் காய்கறிகள், கடலை உள்ளிட்ட செடிகளும் பயிரிட்டு உள்ளனர். சில இடங்களில் தென்னை மரங்கள் நடப்பட்டு அவற்றை பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய கோடை வெயில் தற்போது வரை நீடித்து வருவதால் பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் அந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிட்ட பயிர்களுக்கு தண்ணீர் விடமுடியாமல் இருந்து வருகின்றனர்.

இதனால் சில இடங்களில் கிணற்று பாசனத்தில் இருந்த தென்னை மரங்கள் தற்போது கருகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் ஆரம்பித்ததால் கிணறுகளில் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதனால் எங்களது தோட்டத்தில் ஏற்கனவே வைத்து பராமரித்து இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தேங்காய் காய்த்திருந்த நிலையில் தற்போது கருகி வருவதால் பெரும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story