கோவை: கட்டுப்பாட்டை இழந்து 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த கார் - கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி


கோவை: கட்டுப்பாட்டை இழந்து 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த கார் - கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
x

120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த காரினுள் இருந்த மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடவள்ளி,

கோவை வடவள்ளியைச் நவாவூர் பிரிவைச் சேர்ந்தவர் விக்னேஸ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், இவரது நண்பர்களும் கோவை சிறுவாணி சாலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கிளப்பில் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். ஆதர்ஸ் அழைப்பை ஏற்று அவரது நண்பர்களான வடவள்ளி எஸ்.வி. நகரைச் சேர்ந்த ரோஷன் (19) மற்றும் ரவி (18), நந்தனன் (18) ஆகியோரும் சென்று ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

இரவில் அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர். இன்று கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் அதிகாலையே புறப்பட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார்கள். ஆதர்ஸ், ரோஷன், ரவி, நந்தனன் ஆகிய 4 பேரும் ஒரு காரில் வடவள்ளிக்கு புறப்பட்டனர். காரை ரோஷன் ஓட்டி வந்தார். கார் வேகமாக வடவள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தது. தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அதி சாலையோரம் 120 அடி ஆழமுள்ள பெரிய கிணற்றுக்குள் வேகமாக வந்த கார் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் மற்ற 3 பேரால் காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. ஆதர்ஸ், ரவி, நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி பலியானார்கள்.

ரோஷன் நடந்த சம்பவத்தை அந்த பகுதியினரிடம் தெரிவித்து உதவி கேட்டார். இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த கார் வெளியே கொண்டு வரப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உயிரிழந்திருந்தனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story