நட்பாக பழகி துரோகம்.. நகைக்காக நடந்த கொடூரம்: பிசியோதெரபிஸ்ட் கொலையில் கள்ளக்காதல் ஜோடி கைது


நட்பாக பழகி துரோகம்.. நகைக்காக நடந்த கொடூரம்: பிசியோதெரபிஸ்ட் கொலையில் கள்ளக்காதல் ஜோடி கைது
x

கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைத்தது.

கோவை:

கோவை செட்டிபாளையம் சாலை மலுமிச்சம்பட்டி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 37), பிசியோதெரபிஸ்ட்.

கடந்த சில தினங்களுக்கு முன், இவர் கொலை செய்யப்பட்டார். வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தனலட்சுமியின் வீட்டிற்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்ததும், அவர்கள் நீண்ட நேரம் அதே பகுதியில் இருந்துவிட்டு சென்றதும் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக விசாரித்தபோது அவர்கள், வால்பாறை சோலையார் நகரை சேர்ந்த சந்திரஜோதி (41), பெரம்பலூர் மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த சுரேஷ் (39) என்பதும், அவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரிய வந்தது.

கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்த சந்திரஜோதியும், மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த சுரேசும் கோவை மாவட்டம் கோட்டூரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவிபோல் வசித்ததும், அவர்கள் பணம், நகைக்கு ஆசைப்பட்டு தனலட்சுமியை கொலை செய்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று ஆனைமலை பகுதியில் பதுங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடியான சந்திரஜோதி, சுரேஷ் ஆகியோரை மடக்கி பிடித்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்திரஜோதி போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் மீதும், சுரேஷ் மீதும் சரவணம்பட்டி போலீசில் கொள்ளை வழக்கு உள்ளது. இதனால் நாங்கள் கைதாகி கடந்த 2022-ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் இருந்தோம். அப்போது தனலட்சுமியும் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் நான் சில நாட்கள் தனலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தேன். அப்போது தனலட்சுமி நிறைய நகை அணிந்து இருப்பார். இதனால் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க பல நாட்களாக திட்டமிட்டு வந்தேன். சம்பவத்தன்று நானும், சுரேசும் தனலட்சுமி வீட்டுக்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நான் தனலட்சுமியிடம் செலவுக்கு பணம் கேட்டேன். அவர் பணம் இல்லை என்று கூறியதால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நானும், சுரேசும் சேர்ந்து தனலட்சுமியின் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சுத்திணறடித்து கொலை செய்தோம். பின்னர் பீரோ உள்பட வீடு முழுவதும் தேடினோம். ஆனால் பணம் எதுவும் இல்லை. இதனால் தனலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் அவரது செல்போனை கொள்ளையடித்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.


Next Story