ஆறு, குளங்களில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்


ஆறு, குளங்களில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Oct 2023 9:30 PM GMT (Updated: 20 Oct 2023 9:30 PM GMT)

ஆறு, குளங்களில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல்

ஆறு, குளங்களில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரவிச்சந்திரன், ராணி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கங்காதேவி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், அதிகாரிகள் தெரிவித்த பதில்கள் விவரம் வருமாறு:-

தாய்முத்து:- கே.புதுக்கோட்டையில் குளத்தில் ஒருபகுதி தனிநபருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து குளத்தை மீட்க வேண்டும். கலெக்டர்:- அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாகரன்:- சத்திரப்பட்டி பகுதியில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. காட்டு யானைகளை தடுக்க சோலார் வேலி அமைக்க வேண்டும்.

கலெக்டர்:- காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடாமல் தடுக்க சோலார் வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளம்பர பேனர்கள்

நல்லசாமி:- நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பர பேனர்கள் வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும்.

கலெக்டர்:- சாலை விபத்துகளை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் இருந்தால் அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

கிருஷ்ணன்:- பழனி அருகே ஆண்டிப்பட்டி வனப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு கிராம மக்கள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. சிறப்பு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.

கலெக்டர்:- கோவில் அமைந்துள்ள பகுதி திருப்பூர் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே திண்டுக்கல் அதிகாரிகள், திருப்பூர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கி கொடுக்க வேண்டும்.

பெருமாள்:- 15 குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய மாங்கரை ஆறு தூர்வாரப்படவில்லை. ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் திங்கட்கிழமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை வேறுநாளில் நடத்த வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

கலெக்டர்:- அந்தந்த பகுதி விவசாயிகள், ஆர்.டி.ஓ.விடம் பேசிமுடிவு செய்து கொள்ளலாம்.

ஆறுகளில் குப்பைகள்

ராமசாமி:- குடகனாறு, சந்தானவர்த்தினி ஆறு, வரட்டாறு, மாங்கரை ஆறு ஆகியவற்றில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் அந்த ஆறுகளில் கொட்டப்படுவதால், ஆறுகள் பாழாகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

கலெக்டர்:- ஆறுகள், குளங்களில் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன்:- கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வனவிலங்குகளால் விளைபயிர்கள் சேதமாவது தொடர்கிறது. அதற்கு வனத்துறை உரிய இழப்பீடும் தருவதில்லை. எனவே வனவிலங்குகள் பயிர்களை நாசப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

கலெக்டர்:- வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு நிவாரணத்தை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

இறுதியில் உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயிகள், 58 கிராம கால்வாய் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என்றனர். அதற்கு தொழில்நுட்ப குழு ஆய்வுக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.


Next Story