சந்திரயான்-3 வெற்றி:இஸ்ரோ திட்ட இயக்குனரின் தந்தைக்கு கலெக்டர் வாழ்த்து
சந்திரயான்-3 வெற்றியை தொடா்ந்து இஸ்ரோ திட்ட இயக்குனரின் தந்தைக்கு கலெக்டர் வாழ்த்து தொிவித்தாா்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இத்திட்டத்தை இயக்கிய திட்ட இயக்குனரான விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார்.
சந்திரயான்-3 வெற்றி பெற்றதையொட்டி அதன் திட்ட இயக்குனர் விழுப்புரம் வீரமுத்துவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதேபோல், விழுப்புரத்தில்உள்ள அவரது தந்தையான ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பழனிவேலையும் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று காலை விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள், வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் வீட்டிற்கு சென்று அவரை வாகனத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்த மாவட்ட கலெக்டர் சி.பழனி, விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலுக்கு பொன்னாடை அணிவித்து பழங்கள், புத்தகம் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், வீரமுத்துவேலின் நண்பர்கள் புருஷோத்தமன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.