பட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு
அரியலூரில் பட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டுவரும் பட்டாசு உற்பத்தி அலகு மற்றும் விற்பனை கடைகளை கண்காணித்திட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று உடையார்பாளையம் தாலுகா, நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார். அப்போது, வரைபடத்தில் உள்ளவாறு கட்டிட அமைப்பு உள்ளதா? எனவும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே இருப்பு உள்ளதா? எனவும், வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகளின் அளவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும், உற்பத்தி செய்த வெடி பொருட்களை உடனடியாக குடோனில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்றும், அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் முறையாக பராமரித்திடவும், அனைத்து வாகனங்களையும் தொழிற்சாலைக்கு வெளி பகுதியில் மட்டுமே நிறுத்தவேண்டும் எனவும் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். மேலும், தீயணைப்பு கருவிகளை உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டார். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தி அலகு மற்றும் பட்டாசு விற்பனைக்கடைகளை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் தனித்தனியே உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.