தளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு


தளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து தளவானூர் குடியிருப்புகளில் தண்ணீர் புகாமல் இருக்க நடந்து வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுப்படுகையை சமப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டு மழைவெள்ளத்தால் உடைந்தது.அதோடு ஆற்றின் கரையோரம் மண்அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.

இதையடுத்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க சேதமடைந்த அணைக்கட்டை வெடிவைத்து தகர்க்கப்பட்டபோதிலும் தொடர் வெள்ளப்பெருக்கினால் படிப்படியாக கிராமத்தையொட்டிய மண் கரைகளை அரித்துக்கொண்டு வெள்ளம் புகுந்தன. இதன் காரணமாக ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டதோடு கரையோரத்தில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

வெள்ளஅபாய எச்சரிக்கை

இந்நிலையில் சேதமடைந்த அணைக்கட்டை விரைந்து சீரமைக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே தற்போது கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் தென்பெண்ணை ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

இதனிடையே விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அங்குள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் நேற்று தளவானூர் அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தளவானூர் கிராமத்தையொட்டி மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு ஆற்றுப்படுகையை சமப்படுத்தி தண்ணீர் சீரான ஓட்டமாக செல்லும் வகையிலும், கரையோரம் மண் அரிப்பு ஏற்படாத வகையில் அணைக்கட்டின் வலதுபுறமான எனதிரிமங்கலம் பகுதி வழியாக தண்ணீரை கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை

மேலும் தளவானூர் அணைக்கட்டு பகுதிக்கு அதிகளவு தண்ணீர் வருவதை தடுக்க இதற்கு முன்பாக உள்ள திருக்கோவிலூர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுகளில் உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீரை திருப்பி ஏரிகளுக்கு கொண்டு செல்லவும், கிளை ஆறான மலட்டாற்றில் தண்ணீரை திருப்பி விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஊருக்குள் வெள்ளநீர் புகாமலிருக்க முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஷோபனா, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story