கொசுப்புழு உற்பத்தியாக காரணமான 32 பள்ளிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் கொசுப்புழு உற்பத்தியாக காரணமான 32 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பு நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை உடனுக்குடன் பெறுவதற்காக பிரத்யேகமாக சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டு, காய்ச்சல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் கள பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்ற தேவையுள்ள நபர்களுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் நிகழ்வுள்ள இடங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இம்முகாம்களில் காய்ச்சளுக்கான சிகிச்சையோடு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
ரத்த மாதிரி சேகரிப்பு
மேலும் மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி 3 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 1-ந் தேதி முதல் தினந்தோறும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் தினசரி 90 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணி, புகைமருந்து தெளிக்கும் பணி, குளோரினேஷன் ஆய்வு பணி ஆகிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
137 பள்ளிகளில் ஆய்வு
இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள 137 பள்ளி- கல்லூரிகளில் இன்று (அதாவது நேற்று) சுகாதாரத்துறையினர் மூலம் ஆய்வு செய்ததில், கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த 32 பள்ளிகளுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் கொசு உற்பத்தியை முழுமையாக அழித்திட வேண்டும். அவ்வாறு கொசு புழுக்கள் பள்ளிகளில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார சான்றிதழ் ரத்து செய்ய சுகாதார துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.