சுதந்திர தின விழாவையொட்டி 15-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு


சுதந்திர தின விழாவையொட்டி 15-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x

சுதந்திர தின விழாவையொட்டி வருகிற 15-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா என அரசால் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக அனைத்து வீடுகளில் தேசியகொடி என்ற நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்றிட வேண்டும். மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு நிறுவனங்களான பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களிலும் தேசிய கொடியை ஏற்றிட வேண்டும்.

மேலும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியகொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு யாரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய கொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும்.

ஊராட்சிகளின் 1-4-2022 முதல் 31-7-2022 வரை காலத்திற்கான வரவு செலவு அறிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசியகொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010 மறு கணக்கெடுப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஊரகம் மற்றும் பிற துறை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story