பள்ளியில் பிளஸ்-2 மாணவி சாவு: வாட்ஸ்-அப் மூலம் போராட்டத்திற்கு அழைத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது


பள்ளியில் பிளஸ்-2 மாணவி சாவு:    வாட்ஸ்-அப் மூலம் போராட்டத்திற்கு அழைத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது
x

பள்ளியில் பிளஸ்-2 மாணவி இறந்தது தொடர்பாக கடலூரில் போராட்டம் நடத்த வாட்ஸ்-அப் குழு மூலம் அழைப்பு விடுத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்


போலீசாரை கண்டதும் ஓட்டம்

கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சில்வர் பீச் கடற்கரை அருகில் 5 பேர் கொண்ட கும்பல் நின்று பேசிக் கொண்டிருந்தது. அதில் அவர்கள் வேப்பூர் மாணவி ஸ்ரீமதி, கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போன்று, கடலூர் மாவட்டத்திலும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று பேசினர். இதை கேட்ட, போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

மாணவர் கைது

பின்னர் போலீசார் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள புலியூரை சேர்ந்த விஸ்வலிங்கம் மகன் விஜய் என்கிற விஜய்வளவன் (வயது 21) என்பதும், கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-வது ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை போன்று கடலூர் சில்வர் பீச் அருகில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி முன்பும் இன்று (அதாவது நேற்று) கலவரத்தில் ஈடுபட வாட்ஸ்-அப் குழு மூலம் இளைஞர்களை திரட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் குவிப்பு

மேலும் சில்வர் பீச்சுக்கு இளைஞர்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் உப்பனாறு பாலம் அருகில் பலத்த சோதனை மேற்கொண்டனர். சில்வர் பீச் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே கல்லூரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற இளைஞர்கள் யாரையும் சில்வர் பீச்சுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story