பெரம்பூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு


பெரம்பூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
x

பெரம்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

பெரம்பூர் கொல்லம் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஆர்த்தி (வயது 19). இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவரும், மாதவரம் அடுத்த மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் குடிபோதையில் ஆர்த்தி வீட்டு அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசார் ஆகாஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆகாஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷ் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டு எழுதிக்கொடுத்து விட்டு ஆகாஷை இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் வீட்டில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஆர்த்தி வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை தனது உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அவர்கள் அலறல் சத்தம் கேட்ட ஆர்த்தியின் அண்ணன் திலீப் ஓடிவந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக செத்தார். செம்பியம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செம்பியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story