போலீஸ் உடையில் தியேட்டர் மேலாளரை மிரட்டிய கல்லூரி மாணவர்


போலீஸ் உடையில் தியேட்டர் மேலாளரை மிரட்டிய கல்லூரி மாணவர்
x

போலீஸ் உடையில் சினிமா தியேட்டர் மேலாளரை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் சினிமா தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கு இருந்த நிர்வாகிகளிடம் பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா பார்க்க வருவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வந்திருப்பதாக கூறினார். சினிமா தியேட்டரில் எத்தனை பேர் உள்ளனர்?. இதில் மாணவர்கள் யார்? யார்? என தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டார். மேலும் அந்த நபர் தான் சென்னை ஆவடியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றுவதாகவும் கூறினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சினிமா தியேட்டர் மேலாளர், உடனடியாக மணவாளநகர் போலீசாருக்கு போன் மூலம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் போலீஸ் உடை அணிந்து சினிமா தியேட்டரில் மிரட்டிய வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காந்தி நகரை சேர்ந்த சிவபிரகாசம் (வயது 22) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு ரேடியாலஜி படித்து வரும் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போலீஸ் சீருடை அணிந்து தன்னை போலீஸ் என்று கூறி சினிமா தியேட்டரில் மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் சிவபிரகாசத்தை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.


Next Story