கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி


கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி
x

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

போராட்டத்தில் ஈடுபட முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் துண்டு பிரசுரம் வழங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். இதனை அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஜெகதீசன், கவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்தனர்.

அப்போது அனுமதியின்றி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது மற்றும் போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்குவது குற்றமாகும். ஸ்ரீமதியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள். எனவே போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

மாணவர்களுக்கு அறிவுரை

இதையடுத்து மாணவர்கள் போராட்ட முயற்சியை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் ராஜமூர்த்தி உள்பட பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகளை கல்லூரி வளாகத்திற்கு முன்பாக வரிசையாக அமர வைத்து, அவர்களுக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறி, போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள், எதிர்கால நலன் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் சினிமா போன்றவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது அவர் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்? என்று கேட்டபோது, அவர்கள் பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களை கூறினர். ஆனால் ஒரு சில மாணவிகள் தங்களுடைய தந்தைதான் முதல் கதாநாயகன் என்றும், தாய்தான் கதாநாயகி என்றும் தெரிவித்தனர். அந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அமைதியாக வகுப்பறைக்குள் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story