ஆவடி அருகே கல்லூரி மாணவிகள் போராட்டம்


ஆவடி அருகே கல்லூரி மாணவிகள் போராட்டம்
x

ஆவடி அருகே கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு அருகே தனியார் பெண்கள் கல்லூரி செயல்படுகிறது. இங்கு 2 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இந்த கல்லூரி வளாகத்தை ஒட்டி தனியாருக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் காலிமனை உள்ளது. இதன் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீருடன் கலந்து பல மாதங்களாக காலிமனையில தேங்கி உள்ளது.

அந்த கழிவுநீர் கல்லூரி சுற்றுச்சுவரை தாண்டி கல்லூரி வளாகத்துக்குள் கசிந்து விளையாட்டு திடலுக்குள்ளும் புகுந்து இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கல்லூரி மாணவிகள் வகுப்பறை கதவை திறந்து வைக்க முடியாமலும், விளையாட்டு திடலில் விளையாட முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீரை அகற்ற கோரி கல்லூரி நிர்வாகம் சார்பாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ெதரிகிறது. கழிவுநீரில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக நேற்று முன்தினம் கல்லூரி மாணவிகள் சிலர் மயங்கி விழுந்ததாகவும், சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவிகளை மதியத்துக்கு மேல் கல்லூரி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவிகள், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கல்லூரி நுழைவு வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் ஆவடி போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story