அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கடற்கரை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் - 3 பேர் கைது
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் 3 கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 19). இவர், சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலில் நண்பர்களுடன் வந்தார்.
ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, மாநில கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். பின்னர், ரெயிலின் நடைமேடையில் இறங்கி ''கும்மிடிப்பூண்டி ரூட் தான் கெத்து' என்று கூறி, ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதேபோல, ரெயில் மீதும் கற்களை வீசி சேதப்படுத்தினர். பின்னர், ராஜேசை கத்தியை காட்டி மிரட்டினர். ரெயில் நிலையத்தில் மாணவர்கள் அட்டகாசம் செய்வது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில் ராஜேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் குற்றத்தில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 18 வயது மாணவர்கள் 2 பேர் மற்றும் மீஞ்சூரை சேர்ந்த 17 வயது மாணவர் என 3 மாணவர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். 3 பேரும் மாநில கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆவர்.
அரசு சொத்தை சேதப்படுத்துதல், பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது, கத்தியை காட்டி மிரட்டுதல், தகாதவார்த்தை பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் 3 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.