தமிழர் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - அன்புமணி ராமதாஸ் பாராட்டு
தமிழர் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா என்று அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டு களித்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் பாராட்டியதே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
தொடக்கவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. விழா அரங்கில் இருந்து நிகழ்ச்சிகளை பார்த்த நான், தமிழன் என்ற முறையில் பெருமை அடைந்தேன். இந்த விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று தொடக்க விழாவில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்களின் பலர் எனது நெருங்கிய நண்பர்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
44-வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பங்களித்த கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.