பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகையை வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும்


பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகையை வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும்
x

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பரிசோதகரின் மனைவிக்கு குழு காப்பீடு தொகை ரூ.2 லட்சத்தை 8 சதவீத ஆண்டு வட்டியுடன் எல்.ஐ.சி. மேலாளர் கொடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்

பரிசோதகர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆண்டிக்குரும்பலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து பரிசோதகராக பணி புரிந்தார். இந்த நிலையில் ராமசாமி கடந்த 2014 ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி இறந்து விட்டார். ஏற்கனவே ராமசாமி தனது அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனைவருடன் குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அதன்படி அலுவலகம் மூலம் பணியாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து, அதனை திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ஒருவர் மூலம் குழு மற்றும் காப்பீடு திட்டங்கள் வட்டார அலுவலகத்தின் சென்னை ஆயுள் காப்பீட்டு கழக (எல்.ஐ.சி.) மேலாளர் அலுவலகத்தில் பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு வந்தது.

குழு காப்பீடு

ஆனால் ராமசாமி இறந்த பிறகு, அவருக்கு குழு காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தொகை ரூ.2 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த ராமசாமியின் மனைவி கலைமணி தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்ற தலைவர் ஜவஹர் மற்றும் நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

வட்டியுடன்...

இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று மாலை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜவஹர் தீர்ப்பளித்தார். அதில், சென்னை ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மேலாளர் குழு காப்பீட்டு தொகையான ரூ.2 லட்சத்தை 8 சதவீத ஆண்டு வட்டியுடன் 20.7.2014 முதல் மேற்கூறிய தொகையை ராமசாமியின் மனைவிக்கு செலுத்தும் வரை கொடுக்க வேண்டும். மேலும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனர் ரூ.75 ஆயிரம் கலைமணிக்கு தங்களின் சேவை குறைபாட்டால் ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

வழக்கு செலவு

இவ்வழக்கு செலவு தொகையாக அவருக்கு ரூ.10 ஆயிரம் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனர், சென்னை ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மேலாளர் கூட்டாகவும், தனித்தனியாகவும் செலுத்த வேண்டும் என்றும், ஆண்டிகுரும்பலூர் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளருக்கு எதிராக கலைமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.


Next Story