தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு
செஞ்சி போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது
செஞ்சி
மனைவியிடம் தகராறு
செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). செஞ்சியில் பஸ்களில் தண்ணீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நடராஜன் தினமும் மதுகுடித்து விட்டு அவரது மனைவியிடம் தகராறு செய்வாராம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செஞ்சி கூட்டுரோடு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். மேலும் கடந்த மாதம் 18-ந் தேதி குடும்ப தகராறில் மனைவி குப்பம்மாள் கொதிக்கும் ரசத்தை நடராஜன் முகத்தின் மீது ஊற்றிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மனைவின் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன் நடராஜன்ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் நேற்று குடி போதையில் செஞ்சி போலீஸ் நிலையம் எதிரில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த நடராஜன் தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரை வலியுறுத்தினார். அப்போது அங்கிருந்த போலீசார் புகாரே இல்லாமல் என்ன நடவடிக்கை எடுப்பது என்றனர்.
அப்போது திடீரென நடராஜன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் நீண்ட நேரம் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடராஜன் நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.