விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அத்தியவாசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப்பெறவும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேபோல தமிழகத்தில் சொத்துவரி மற்றும் மின்சார கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story