இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சையத் ஜிலானி மகன் தஸ்தகீர்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரிஸ்வான் மகள் அப்ஸா(வயது 23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. அப்ஸாவை, அவரது கணவர் தஸ்தகீர் மற்றும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3 மாத பெண் குழந்தையை கொல்ல சொல்லி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதில் மனமுடைந்த அப்ஸா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்ஸாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் தஸ்தகீர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்ஸா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் பி.எச்.கிப்ஸ் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் அருண்குமார், பொருளாளர் ஆர்.அஜீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே.ராமசாமி, ஒன்றிய செயலாளர் கே.ரவி, சிறுபான்மை பாதுகாப்பு இயக்க தலைவர் பி.எச்.கே.பசீர், அகமது, மாதர் சங்க மாவட்ட செயலாளர் வளர்மதி, இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் எஸ்.விஜய் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.