4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.6 லட்சம் இழப்பீடு


4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.6 லட்சம் இழப்பீடு
x

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் 4 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல்

நுகர்வோர் கோர்ட்டு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (வயது66). இவரும், இவரது மகள்களான திவ்யா (30), சரண்யா (27) ஆகியோரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வீட்டுமனை இடம் வாங்குவதற்காக கடந்த 2012-ம் ஆண்டு பணம் செலுத்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மூவரும் கடந்த 2013-ம் ஆண்டு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், இழப்பீட்டுத் தொகையை அந்த தனியார் நிறுவனம் அவர்களுக்கு வழங்கவில்லை.

கோர்ட்டு உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை பெற்று தர வேண்டுமென மூவரும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக வக்கீல் முரளி குமாரை மத்தியஸ்தராக நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் கடந்த மாதம் நியமனம் செய்தார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை தனியார் நிறுவனம் நேற்று வழங்கியது.

இழப்பீடு

இதை போலவே தவறான மருத்துவ சிகிச்சை வழங்கியதாக தனியார் மருத்துவமனை டாக்டர் மீது 2018-ம் ஆண்டு தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் வழக்கை தாக்கல் செய்த கோவை நேரு நகரில் வசிக்கும் ஜெயபாலன் மனைவி கவுசல்யா (34) என்பவருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் 6 ஆண்டுகளுக்கான வட்டி வழங்க வேண்டும் என கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு வழக்கு தாக்கல் செய்த கவுசல்யாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.


Next Story