நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - அண்ணாமலை பதில்
பிரதமர் மோடியை விமர்சிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்ற தகவலை யார் சொன்னார்கள் என தெரியவில்லை. கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது; கட்சித் தலைமையின் முடிவுதான் எனது முடிவு.
கட்சி தேர்தல் பணி செய்ய சொன்னால் தேர்தல் பணி செய்யப் போகிறேன். பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னால் பிரச்சாரம் செய்வேன். நான் கட்சியில் எனக்கு என எதுவும் கேட்கவில்லை. எனக்கு கொடுங்க என்றோ கொடுக்காதீங்க என்றோ கேட்கவில்லை. அனைத்தையும் கட்சிதான் முடிவு செய்யும். எங்களது கட்சியில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்துள்ளார்கள்; அதை செய்து கொண்டிருக்கிறேன்.
4-ந் தேதி கல்பாக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். எந்தெந்த கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, யாரெல்லாம் மேடையில் இருப்பார்கள் என ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என வாய்சவடால் விடுகிறார். தாத்தா, தந்தை பெயர் இல்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பின்புலம் கிடையாது. பிரதமர் மோடியை விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.