தேர்தல் பிரசாரத்தில் இழிவாக பேசியதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சீமான் மீது புகார் - தமிழக அரசுக்கு நோட்டீஸ்


தேர்தல் பிரசாரத்தில் இழிவாக பேசியதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சீமான் மீது புகார் - தமிழக அரசுக்கு நோட்டீஸ்
x

சீமான் விவகாரம் குறித்தும் தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்க உள்ளதாக நீதிக்கான பேரவை தலைவர் வக்கீல் வெங்கடேஷ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நீதிக்கான பேரவை தலைவர் வக்கீல் வெங்கடேஷ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான், தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் மோசமாக பேசி இருக்கிறார். அருந்ததியர் சமூகத்தினரை வந்தேறிகள், தெலுங்கர்கள் என கூறியிருக்கிறார். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே, இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தோம். ஆணையம், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அந்த தொகுதியில் ஏழை வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்தும், சீமான் விவகாரம் குறித்தும் தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்க உள்ளோம். தேர்தல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story