புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்படாததால் நோயாளிகள் அவதியடையும் நிலை உள்ளது. சுகாதார நிலையத்தில் பயன்படுத்தப்படும் படுக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணக்குமார், காவனூர், ராமநாதபுரம்.
கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்கில் கருவேலமரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மீது கருவேலமரங்களின் முட்கள் காயங்களை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கம், பரமக்குடி, ராமநாதபுரம்.
குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?
ராமநாதபுரம் நகர் ஈசா பள்ளிவாசல் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, ராமநாதபுரம்.
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
ராமநாதபுரம் நகரில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்வதுடன் அரசின் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுறுத்த வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
கொசுத்தொல்லை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கடியால் மக்கள் நாளுக்கு நாள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காளையார்கோவில்.
பஸ் வசதி தேவை
சிவகங்கை மாவட்டம் கீழடி தமிழர்களின் வரலாறு மற்றும் கலாசாரத்தை உலகிற்கு பறைசாற்றும் மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அண்டை மாவட்டங்களில் இருந்து கீழடிக்கு நேரடியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசன், சிவகங்கை.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. மேலும் இந்த சத்தத்தால் இருதய ேநாயாளிகள் அச்சம் அடைகின்றனர். இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், காரைக்குடி.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலூகா தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிலர் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியினருக்கு தடையின்றி அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாக்கூர்.
பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அவ்வப்போது பழுதாகி வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், எஸ்.புதூர்.