புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா இ.ரெட்டியபட்டி அருகே சோலைபட்டி கிராமத்தின் மேல தெருவில் கழிவுநீர் கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், வெம்பக்கோட்டை.
பாதாள சாக்கடை பணிகள் விரைவு பெறுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டுள்ள நிலையில் நகர் முழுவதும் தூசிமயமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுவதோடு சுவாச பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
ஆறுமுகம், ராஜபாளையம்.
அரசு அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வர். இந்த நிலையில் அலுவலக மேற்கூரை மற்றும் கட்டிடம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, சாட்சியாபுரம்.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரம் என்ற வள்ளியூரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் தரைத்தளம் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் வெயில், மழை காலத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும்போது அவதிப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று நீரை எடுத்து வருகிறார்கள். சிலர் காசு கொடுத்தும் குடிநீரை வாங்குகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டால் இப்பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோர் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.