கைதிக்கு கஞ்சா, செல்போன் வாங்கி கொடுத்ததாக புகார்: சேலம் ஆயுதப்படை ஏட்டு பணி இடைநீக்கம்


கைதிக்கு கஞ்சா, செல்போன் வாங்கி கொடுத்ததாக புகார்:  சேலம் ஆயுதப்படை ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2022 8:00 PM GMT (Updated: 14 Dec 2022 8:00 PM GMT)

கைதிக்கு கஞ்சா, செல்போன் வாங்கி கொடுத்த புகாரின் பேரில், சேலம் ஆயுதப்படை ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்

சேலம்,

ரவுடிக்கு கஞ்சா, செல்போன்

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேட்டு என்ற மணிகண்டன். பிரபல ரவுடியான இவருக்கும், எதிர் கோஷ்டியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், ரவுடி மணிகண்டனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறையில் இருந்த ரவுடி மணிகண்டனுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அந்த அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ் ஏட்டு மணிக்கும், ரவுடி மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஏட்டு, ரவுடிக்கு செல்போன், கஞ்சா, சாப்பாடு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்ததாகவும், இதற்காக ரவுடியிடம் ரூ.25 ஆயிரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஏட்டு பணி இடைநீக்கம்

இதைத்தொடர்ந்து ஏட்டு மணி, கைதியிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் செல்போனை திருப்பி தருமாறு ஏட்டு மணி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த ரவுடி மணி, நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், கைதியிடம் ஏட்டு மணி பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு செல்போன், கஞ்சா வாங்கி கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடாவுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆயுதப்படை ஏட்டு மணி நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் பணியில் இருந்த மற்றொரு ஆயுதப்படை போலீஸ்காரருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story