ரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு 'சீல்'


ரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு சீல்
x

ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து கரூரில் 3 குடோன்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கரூர்

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாகவோ அல்லது தடை செய்யப்பட்ட மாசுபடுத்தும் ரசாயனங்களால் வர்ணம் பூசப்பட்டதாகவோ இருக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரூர் மாநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புகார்

கரூர் சுங்ககேட் அருகே வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு, சிலைகள் செய்து கொடுக்கும் பணி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்ததாக கூறி மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஜெயகுமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் சுங்ககேட் பகுதியில் உள்ள குடோன்களில் உள்ள விநாயகர் சிலைகளை சோதனை செய்தனர். அப்போது விநாயகர் சிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் ரசாயன பொருட்கள் கலந்திருப்பதாக கூறி அப்பகுதியில் இருந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு 'சீல்' வைத்தனர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவலறிந்த இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், அங்கு வந்து அதிகாரிகளிடம் முறைப்படி சோதனை செய்யப்பட்டதா?, எப்படி 'சீல்' வைக்கலாம்?, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திடீரென 'சீல்' வைத்தால் என்ன செய்வது?, நாங்கள் ஆர்டர் கொடுத்த சிலைகள் எப்படி? எங்களுக்கு கிடைக்கும். நாங்கள் முன்பணம் கொடுத்துள்ளோம். திடீரென விநாயகர் சிலையை எங்கே சென்று ஆர்டர் கொடுப்பது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story