எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் - பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண், திருச்சி சூர்யா சிவா கூட்டாக பேட்டி
எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.
திருப்பூர்,நவ.25-
எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.
சர்ச்சை ஆடியோ
தமிழக பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. பிரிவு பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித்தலைவர் கோவையை சேர்ந்த டெய்சி சரண் ஆகியோர் அலைபேசியில் உரையாடிய சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோவால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் பா.ஜ.க. அலுவலகத்தில் வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணையின் அறிக்கை, தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக்குழுவினர் தெரிவித்தனர்.
கண்பட்டு விட்டது
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். ஆனால் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்களது பிரச்சினையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள்.
இந்த ஆடியோ சம்பவம் கண்பட்டது போல் அரங்கேறிவிட்டது. தனிப்பட்ட முறையில் இருந்தாலும், பொது தளத்தில் இருந்தாலும் ஆடியோ வெளியானதால், இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்துவிட்டோம். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டோம். எங்கள் தரப்பில் இருந்து ஆடியோ வெளியாகவில்லை. அது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது.
அக்காள், தம்பியாக பழகுகிறோம்
நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், குடும்பமாக பழகி வந்தோம். அக்கா, தம்பியாக பழகுகிறோம். இனியும் அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்னதொரு அசாம்பாவிதம் தான். கே.டி.ராகவன் இன்று வரை கட்சி பணியை தொடரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் திருச்சி சூர்யா, "கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மை இது. ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு தி.மு.க. அமைச்சர்களாக உள்ளனர். தி.மு.க. எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்." என்றார்.
---
படம் உண்டு.
திருப்பூரில் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தபோது எடுத்த படம்.