மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்- ரூ.9 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு
மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கட்டண உயர்வு
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொன்குமார், ரகுநாதராஜா, திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் ஜேம்ஸ் தலைமையுரை நிகழ்த்தினார். மாவட்ட சங்க பிரதிநிதிகள், இணைப்பு சங்க பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றினர். உண்ணாவிரத போராட்டம் மட்டுமின்றி, ஒரு நாள் தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம், கதவடைப்பு போராட்டமும் மதுரை மாவட்டம் முழுவதும் நடந்தது.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், சுமார் 8 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். இந்த போராட்டத்தினால், 80 லட்சம் பேருக்கு வேலையிழப்பு, ரூ.9 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு, ரூ.2500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பாக 430 சதவீதம் உயர்த்திய நிலை கட்டணத்தை திரும்ப பெறவும், பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணத்தை திரும்ப பெற கோரிக்கை வைத்துள்ளோம். 3பி-யில் இருந்து 3ஏ-1 நடைமுறைக்கு மாற்றி குறு, சிறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கட்டண உயர்வு என்பது முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
சென்னையில் உண்ணாவிரதம்
மேலும், எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அடுத்த கட்டமாக வருகிற 9-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் கருப்பு பேட்ஜ் அணிந்து மனு கொடுக்கும் போராட்டமும், 16-ந்தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மாரியப்பன் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி, உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். முடிவில், மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.