விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலகம், ரெயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலகம், ரெயில் நிலையத்தை  ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
x

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் ராசிபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்

ராசிபுரம்

விவசாயிகளுக்கு இழப்பீடு

சேலம்-கரூர் அகல ரெயில் பாதை திட்டத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த கீரனூர், நெ.3. குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் காலதாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுவரையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில் ரெயில்வே துறைக்கு நிலம் எடுத்துக் கொடுத்ததற்காக ராசிபுரம் தாசில்தார் அலுவலக வாகனங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் ரெயில் நிலையத்தை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர்.

கோர்ட்டு ஊழியர்கள்

அங்கிருந்த துணை தாசில்தாரிடம் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை தெரிவித்தனர். ஆனால் தாசில்தார் அங்கு இல்லாததால் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். இதேபோல் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கும் சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் ஜப்தி செய்ய வந்து இருப்பது குறித்து கூறினர். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறி விட்டனர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் அங்கு இருந்து திரும்பிச் சென்றனர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் தாலுகா அலுவலகம் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story