சனாதனம் பிரச்சினையில் காங்கிரஸ் தலையிட விரும்பவில்லை- ப.சிதம்பரம் பேட்டி


சனாதனம் பிரச்சினையில் காங்கிரஸ் தலையிட விரும்பவில்லை- ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சனாதனம் பிரச்சினையில் காங்கிரஸ் தலையிட விரும்பவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

சனாதனம் பிரச்சினையில் காங்கிரஸ் தலையிட விரும்பவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர்களை மதிப்பதில்லை

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி-20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் மாநாட்டினையொட்டி ஜனாதிபதி அளிக்கும் விருந்திற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பில்லை. இது எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத நிகழ்வாகும்.

ஜனநாயகமே இல்லாத நாட்டிலும், எதிர்க்கட்சிகளே இல்லாத நாட்டிலும் மட்டுமே இது சாத்தியம். வருங்காலத்தில் இந்தியாவிற்கு இந்தநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது, இச்செயல் வருந்தத்தக்கது.

எதிர்க்கட்சி தலைவர்களை மதிப்பதே உண்மையான ஜனநாயகம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வாஜ்பாயை மதித்து அவர் தலைமையில் ஐ.நா. சபைக்கு ஒரு கூட்டுக்குழுவை அனுப்பினோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

ஒற்றுமை

நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் 4 இடங்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று உணர்கிறேன். மேலும் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, அரசியல் சாசனத்தில் அவ்வளவு எளிதாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

மாநில அரசுகளை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையினை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர் என்ற நோக்கத்தில் பயணிக்க முயற்சிக்கின்றனர்.

இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடுகள் மாநில அளவில் சுமுகமாக நடைபெறும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தற்போது அறிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை.

2004 தேர்தலில் பிரதமர் மன்மோகன்சிங் என்று யாரும் கூறவில்லை. ஆனால் அவர் 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தலையிட விரும்பவில்லை

மொழிக்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று பேசுதல். மற்றொன்று புரிதல். சனாதன தர்மம் என்றால் தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் இந்து மதம் என்று நம்பப்படுகிறது. இவ்விஷயத்தில் பேசியது ஒரு பொருளில், புரிந்து கொண்டது மற்றொரு பொருளில். இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தலையிட விரும்பவில்லை. எம்மதமும் சம்மதம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story