மல்லூர் அருகேகட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை?கிணற்றில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை
மல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பனமரத்துப்பட்டி,
மேற்பார்வையாளர்
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 29). இவர் மல்லூரை அடுத்துள்ள சந்தியூரில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற வெங்கடேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவருடைய பெற்றோர் வெங்கடேசை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சந்தியூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் வெங்கடேஷ் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அடித்துக்கொலை?
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்சவள்ளி ஆகியோர் வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசை யாரேனும் கட்டையால் அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா? அல்லது அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.