இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணி


இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணி
x

திண்டுக்கல் அருகே இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்


திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சம் செலவில், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் கட்டப்பட்டு வருகிறது. இந்த முகாமில் இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த பணிகளை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று பார்வையிட்டார். இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகள், மேல்நிலை குடிநீர் தொட்டி, குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், நூலகம் மற்றும் பூங்கா கட்டப்படும் இடங்களை பார்வையிட்டார்.


முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்


பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான், நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. அதன்படி தோட்டனூத்து கிராமத்தில் 321 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு பூங்கா, நூலகம் ஆகியவையும் கட்டப்படும். இந்த வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார், என்றார்.


இந்த ஆய்வின் போது அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.



Next Story