ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்; சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்


ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்; சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்
x

பாளையங்கோட்டையில் ரூ.53 கோடியில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

408 குடியிருப்புகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சமாதானபுரம் டாக்டர் அம்பேத்கர் நகரில் ரூ.53 கோடியே 19 லட்சம் செலவில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபாநாயகர் அப்பாவு

விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் தற்காலிக குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1971-ம் ஆண்டு குடிசை வீட்டில் வசித்து வந்தவர்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டும் என்ற நோக்கில் குடிசைமாற்று நல வாரியத்தை கொண்டு வந்தார். அவர் வழியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி கொடுத்து தமிழ்நாட்டில் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்.

கூடுதல் வசதிகள்

பாளையங்கோட்டை சமாதானபுரம் டாக்டர் அம்பேத்கர் நகரில் 1996-ம் ஆண்டு கட்டப்பட்ட 366 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்து விட்டதால், அவற்றை இடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் 408 வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.13.04 லட்சம் செலவிடப்படுகிறது. 400 சதூர அடி பரப்பளவில் படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை போன்ற வசதிகள் இருக்கும். இங்கு மின்தூக்கி (லிப்ட்), கார் நிறுத்தும் வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பாக கட்டப்படும். 18 மாதங்களுக்குள் கட்டி முடித்து ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், மாநகராட்சி கவுன்சிலர் பவுல்ராஜ், களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர்கள் மாடசாமி, ராஜகோபால், ஜானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 3 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. 4-வது வேலைவாய்ப்பு முகாம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பிராசிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் 104 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்தன.

தொடர்ந்து நடந்த பணி ஆணை வழங்கும் நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், "தி.மு.க அரசு பொறுப்பேற்று 2½ ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அளிப்பதில் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையை உருவாக்குவோம் என்று கூறிஉள்ளார். ஆனால் தமிழகம் அந்த இலக்கை எல்லாம் தாண்டி விட்டது. இதற்கு காரணம் சமூக நீதி, அதனால்தான் இன்று கல்வி வளர்ச்சியில் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழகம் உயர்ந்துள்ளது" என்றார்.


Next Story