காஞ்சீபுரம் அருகே ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி
காஞ்சீபுரம் அருகே ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைக்கான மருத்துவ உதவிகளை பெறுவதற்கு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ஜோதிலட்சுமி சிவாஜி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், ஆகியோர் பெரிய காஞ்சீபுரம் தேரடி தெரு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கினார்கள். அதன்படி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர் ஜோதிலட்சுமி சிவாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் மாநகராட்சி செயலாளர் சி.கே. தமிழ்ச்செல்வன், மண்டல தலைவர் சசிகலா கணேசன், சுகாதாரத் தலைவர் பி.சங்கர், மாநகராட்சி பொறியாளர் கணேசன், நகர் நல அலுவலர் அருள் நம்பி பகுதி செயலாளர் திலகர், கல்வெட்டு பி.சிவாஜி, மற்றும் வட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.