சென்னையில் 15 மண்டலங்களில் ரூ.35.36 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி நிர்வாகம் தகவல்


சென்னையில் 15 மண்டலங்களில் ரூ.35.36 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி நிர்வாகம் தகவல்
x

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 15 மண்டலங்களிலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 153 சிப்பங்களாக 370 சாலைகள் 71.09 கி.மீ நீளத்தில் ரூபாய் 35.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கெனவே பழுதான சாலைகளின் மேற்பரப்பு அகழ்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் தார்ச்சாலை உரிய அளவீடுகள் மற்றும் தரத்துடன் அமைக்கப்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையார் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியானது, 3 சிப்பங்களாக 3.52 கி.மீ நீளத்தில், ரூ.3.65 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மாதவரம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள், குறியீடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் ரூ. 37.37 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு திட்ட சேமிப்பு நிதியின் கீழ் அனைத்து மண்டலங்களிலும், 30 சிப்பங்களாக 300 சாலைகளில் ரூ.51.367 கி.மீ நீளத்தில் ரூ.29.71 கோடி மதிப்பில் தார்ச்சாலைகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story