ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி


ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி
x

காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

கரூர்

கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரும், மீன்வளத்துறை ஆணையருமான கே.எஸ்.பழனிச்சாமி கலந்து கொண்டார். கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினாா்.

இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் (பழுது மற்றும் சீரமைப்பு), உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம் 2.0, அம்ருத் 2.0, பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், நான் முதல்வன், மகளிர் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கீழ் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அறிவுறுத்தல்

தொடர்ந்து தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியம், மணவாடி கிராமத்தில் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையினை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அதே கிராமத்தில் பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகத்தினை ஒரு கர்ப்பிணிக்கு வழங்கினார். காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.61.15 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் குறித்தும், பதிவேடுகள் பராமரித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் 10 ஹெச்.பி. கொள்ளளவு கொண்ட மோட்டாரை பார்வையிட்டு செயல் விளக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story