கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 43). இவர் திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் தெற்கு குளக்கரை தெருவில் வரும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கமலக்கண்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 36). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு இரவு திருத்தணியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் எதிரே உள்ள சாலை வளைவில் பாபுவின் மோட்டார் சைக்கிள் வந்தபோது, தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (60) என்பவர் திடீரென சாலை கடக்க முயன்றார்.

எதிர்பாராதவிதமாக பாபுவின் மோட்டார் சைக்கிள் மூர்த்தி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாபு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story